வரும் 19ம் தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி..!

 
1 1

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பாக செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அதன் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், “கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தோம். அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். பல்வேறு நெருக்கடி காரணமாக மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் நவம்பர் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தில் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் 19 ஆம் தேதி சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து 50 வேளாண் விஞ்ஞானிகளுடன் தனி அரங்கில் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வேளாண் மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்” என்றார்.

மேலும் பேசிய அவர், “இந்த மாநாட்டின் நோக்கம் மண்ணின் மலட்டுத்தன்மை, மண்ணில் அதிகளவில் நச்சுத்தன்மை உள்ளதால் உணவுப் பொருட்கள் பாதிப்படைவது, இயற்கை விவசாயம், மண் வளத்தை மேம்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும். அப்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அவற்றை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளோம்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதால், உலகம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். அதே போல, மத்திய மாநில அரசுகள் இயற்கை விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழ்நாட்டில் வெறும் 10% மட்டும் தான் இயற்கை விவசாயம் நடைபெறுகிறது. கடைகளில் கூட ஆர்கானிக் பொருட்களை இயற்கை விவசாயம் என்று கூறி விற்பனை செய்து வருகிறார்கள். இது குறித்து பொதுமக்களுக்கும் போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த மாநாட்டின் மூலம் பொதுமக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.

மேலும், நச்சுத்தன்மை மற்றும் ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதினால், நோய் இல்லாத விவசாய குடும்பமே இல்லை என்ற சூழல் நிலவுகிறது. பல்வேறு நோய்களால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால், இனிவரும் காலங்களில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்” என வலியுறுத்தினார்.