இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!
நாளை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, இன்றிரவு சென்னை வருகிறார். நாளை திருப்பரங்குன்றம் செல்கிறார். தே.ஜ., கூட்டணி சார்பில், மதுரையில் நாளை மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து, தனி விமானத்தில் இன்று இரவு, 8:40 மணிக்கு சென்னை வருகிறார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில், இரவு தங்குகிறார். அங்கு மோடியை, தமிழக பா.ஜ., - அ.தி.மு.க., மூத்த தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.
சென்னையில் இருந்து நாளை காலை, 10:40 மணிக்கு ஹெலிகாப்டரில் மோடி, புதுச்சேரி செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின், புதுச்சேரியில் இருந்து தஞ்சைக்கு ஹெலிகாப்டரில் மோடி செல்கிறார். அங்குள்ள விமான படைக்கு சொந்தமான விமான நிலையத்தில் இருந்து, விமானத்தில் மதுரை செல்கிறார்.
மாலை, 3:55 மணிக்கு திருப்பரங்குன்றம் கோவிலில், மோடி தரிசனம் செய்கிறார். பின், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதைத் தொடர்ந்து, மதுரையில் இருந்து தனி விமானத்தில் டில்லி செல்கிறார்.

