நடிகர் சரத்பாபு மறைவுக்கு பிரதமர், ஆளுநர், ரஜினிகாந்த் இரங்கல்!

 
sarathbabu

நடிகர் சரத்பாபு மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71. முத்து, அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் சரத்பாபுவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஐதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

சரத்பாபு மறைவுக்கு திரையிலகினரும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி, “சரத்பாபு தனது சீரிய நடிப்பிற்காக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி, “பழம்பெரும் நடிகர் சரத்பாபுவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது திறமையும், திரைத்துறைக்கான பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த், “இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ஆளுநர் தமிழிசை, “நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மன்வேதனை அடைந்தேன். சரத்பாபுவை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.