விலை உயர்வு தீர்வு அல்ல..! ஆவின் பால் விலை உயர்வு பரிந்துரைக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆவின் நிறுவனத்தின் இழப்பைக் குறைக்க வேண்டும்; இலாபத்தில் இயக்க வேண்டும் என்பதற்காக, பிற வழிகளை ஆராயாமல் விலையை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரை ஏழை மக்களின் நலனுக்கு எதிரானது.
தமிழ்நாட்டில் அண்மையில் ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டது. ஆவின் நிறுவனம் ஏற்கனவே கடுமையான இழப்பை சந்தித்து வரும் நிலையில், கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், இழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும், நிலைமையை சமாளிப்பதற்கு ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆவின் நிறுவனம் பரிந்துரை அனுப்பியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், அடுத்த சில நாள்களில் ஆவின் நிறுவன பால் விலை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
ஆவின் நிறுவனம் கடந்த 2025&26ஆம் ஆண்டில் ரூ.89.80 கோடி இழப்பை சந்தித்திருக்கிறது என்பதும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் ஆவின் நிறுவனத்தின் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதும் உண்மை தான். ஆனால், அனைத்து இழப்புகளுக்கும் விலை உயர்வு மட்டுமே தீர்வு அல்ல. அதிலும் குறிப்பாக ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏழை மக்களுக்கான சேவை என்ற அளவுகோலைக் கொண்டு தான் அளக்க வேண்டுமே தவிர, இலாப நோக்கம் என்ற தராசைக் கொண்டு எடை போடக் கூடாது.
தமிழ்நாட்டில் ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலைகள் 68% வரை அதிகம் ஆகும். ஆவினில் 3 சதவீத கொழுப்பு சத்துள்ள நீல உறை பால் லிட்டருக்கு ரூ. 40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ. 24 கூடுதலாக விற்பனை செய்கின்றன. அதேபோல், பச்சை உறை பால் ஆவினில் ரூ. 44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் பால் விலை, ரூ. 30 கூடுதலாக ரூ. 74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 60 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் ரூ. 84-க்கு விற்பனை செய்கின்றன.
தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஆவின் பால் விலை மிகவும் குறைவாக இருப்பதால், அது ஏழை& நடுத்தர மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப் பட்டால், அது அதிகபட்சமாக 12.50% உயர்வாக இருக்கும். அதை சாதாரண மக்களால் தாங்க முடியாது. அதிலும் குறிப்பாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆவின் பாலின் விலையும் உயர்த்தப்பட்டால், அது மக்களைக் கடுமையாக பாதிக்கும். ஆவின் நிறுவனத்திற்கும் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். பால் விலையை உயர்த்த வேண்டும் என்ற ஆவின் நிறுவன பரிந்துரையை ஏற்கக் கூடாது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

