நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த குடியரசுத் தலைவர்!

 
1

தமிழ்நாட்டில் தனியாக மீன்வளத்திற்கு என்று பல்கலைக்கழகம் துவங்க 2012ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி நாகப்பட்டினத்தில் உள்ள வெட்டாறு ஆற்றங்கரையோரம் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, இந்த பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்காண்டு காலத்திற்கும் மேலாக ஆளுநர் எவ்வித பதிலையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டு இந்த மசோதா உட்பட 10 மசோதாக்களை ஆளுநர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

அதனை தொடர்ந்து மீண்டும் இந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தார். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய பரிந்துரையை நிராகரிப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று அறிவித்துள்ளார்.