கேரளா அல்ல இனி கேரளம்: மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி முர்மு..!
2024ம் ஆண்டு ஜூன் மாதம் கேரளா சட்டசபையில் மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கான சட்டத்தை கொண்டு வருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதை பரிசீலனை செய்த ஜனாதிபதி, அது தொடர்பான மசோதாவை கருத்துருவுக்காக கேரள சட்டசபைக்கு அனுப்பி இருந்தார்.
இந்த மசோதாவை ஒருமனதாக ஏற்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், மாநிலத்தின் பெயர் மாற்று மசோதா ஆக.11ம் தேதி லோக்சபாவிலும், ஆக.12ம் தேதி ராஜ்ய சபாவிலும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந் நிலையில் அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, கேரளா மாநிலம் இனி கேரளம் என்றே அழைக்கப்படும்.
‘கடவுளின் சொந்த தேசம்’ என்று உலகெங்கும் புகழப்படும் ஒரு மாநிலத்துக்கு, உண்மையிலேயே சொந்தமான பெயர் எது? மலையாள மண்ணின் மைந்தர்கள் நெஞ்சாரச் சொல்லும் ‘கேரளம்’ என்ற பெயரா? அல்லது ஆங்கிலேயர்கள் தங்கள் நாவுக்கு ஏதுவாகச் செதுக்கிக்கொண்ட ‘கேரளா’ என்ற பெயரா? - இதன் ஆழமான வரலாற்றுப் பின்னணியையும் சட்டப் பாதையையும் தெளிவாகப் பார்க்கலாம்.
வரலாற்றுப் பின்னணி
புராணக் கதைகளின்படி, விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பரசுராமர், 21 தலைமுறை சத்ரியர்களை அழித்த பின், ரத்தம் படிந்த தனது கோடரியைக் கடலை நோக்கி வீசியதாகவும், அதன் விளைவாக உருவான வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளுக்குட்பட்ட கடற்கரை நிலப்பகுதியே ‘கேரளம்’ அல்லது ‘கேரளா’ என்றும் கதைகள் நம்பப்படுகின்றன.
வரலாற்றுப்பூர்வமாக, கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேரரசர் அசோகரின் இரண்டாம் பாறை மரபுக் கல்வெட்டில், மலபார் பகுதி ‘கேரளபுத்ரா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மொழி மரபு அடிப்படையில் மலையாளத்தில் கேரம் + ஆளம் = கேரளம் என்றே அழைக்கப்படுகிறது. அதாவது, ‘கேரம்’ என்பது தென்னை மரங்களையும், ‘ஆளம்’ என்பது நிலப்பகுதியையும் குறிக்கிறது. தென்னை மரங்கள் சூழ்ந்த நிலப்பகுதி என்பதால் இம்மாநிலம் கேரளம் என அழைக்கப்பட்டது. மூவேந்தர்களில் ஒருவரான சேரர்கள் ஆண்ட நிலப்பகுதி ‘சேரளம்’ எனப்பட்டு, பின்னர் ‘கேரளம்’ என உருமாறியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மலையாள - ஆங்கில அகராதியைத் தொகுத்த ஜெர்மானிய மொழியியல் வல்லுநர் ஹெர்மன் குண்டர்ட் தனது குறிப்பில், ‘கர்நாடகாவின் கோகர்ணத்துக்கும், தெற்கு முனையான கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியைக் குறிக்கும் ‘கேரம்’ மற்றும் ‘சேரம்’ ஆகிய கன்னடச் சொற்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறது. ‘சேர்’ (இணைதல்) மற்றும் ‘அலம்’ (நிலம்) ஆகிய பண்டைய தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே இச்சொல் உருவானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத்தில் கேரளம் என்பதுதான் மாநிலத்தின் உண்மையான பெயர். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் உச்சரிப்பு வசதிக்காக ‘கேரளா’ என மாற்றினர்.

