இனி 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை - குடியரசு தலைவர் ஒப்புதல்..!

 
1

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ள இப்புதிய சட்டத்தின் படி வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் போதோ அல்லது பாடப்படும் போதோ அதற்கு வேண்டுமென்றே அவமரியாதை செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

குற்றத்தின் தீவிரத்தை பொறுத்து நீதிமன்றங்களால் அபராதம் அல்லது சிறை தண்டனை, அல்லது இவை இரண்டும் சேர்த்தே விதிக்கப்பட இந்த சட்ட விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா முதன்முதலில் கடந்த ஜூலை 29 (புதன்கிழமை) அன்று மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெற்ற அடுத்த நாளே, அதாவது ஜூலை 30 (வியாழக்கிழமை) அன்று மக்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் இதுவரை நடைமுறையில் இருந்த 'தேசிய மாண்புகள் அவமதிப்பு தடுப்பு சட்டம், 1971' என்ற சட்டத்தின் கீழ் தேசியக் கொடி, தேசிய கீதம் மற்றும் இந்திய வரைபடத்தை அவமதிப்பது மட்டுமே தண்டனைக்குரிய குற்றமாக இருந்து வந்தது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய திருத்தத்தின் மூலம், 'வந்தே மாதரம்' தேசியப் பாடலும் இந்தச் சட்டப் பாதுகாப்பின் கீழ் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தியாகிகளுக்கு எழுச்சியூட்டிய தாரக மந்திரமாக விளங்கியது 'வந்தே மாதரம்' பாடல். 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிர்ணய சபையால் இந்த பாடல் 'தேசியப் பாடல்' என்று அறிவிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டது.

எனினும், இதற்குச் சட்டரீதியான பாதுகாப்பு இல்லாத சூழல் நீடித்து வந்தது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டம், தேசியப் பாடலின் மாண்பையும், அதற்குரிய பொது மரியாதையையும் நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.