திருநங்கைகளை சிங்கப்பெண் அதிரடிப்படையில் சேருங்கள்- பிரேமலதா விஜயகாந்த்
திருநங்கைகள் மிகவும் தைரியமானவர்கள், அவர்களை சிங்கப்பெண் அதிரடிப்படையில் சேர்க்க வேண்டும் என தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், “கேப்டனை இறுதியில் தோளில் தூக்கிச் சென்றவர்கள் காவலர்கள்தான். காவல்துறையில் பல வேடங்களில் நடித்து, காவலர்களுடன் நெருக்கமாக இருந்த கேப்டனுக்கு கிடைத்த மரியாதையை, இறுதியில் காவலர்கள்தான் சுமந்து சென்றார்கள். காவல்துறை நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். காவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், ஒரு லட்சம் மக்களுக்கு 150 போலீஸ் என்ற விகிதத்தில் நிரப்பிட வேண்டும்.
திருநங்கைகள் மிகவும் தைரியமானவா்கள், அவா்களை சிங்கப்பெண் அதிரடிப்படையில் சோ்க்க வேண்டும். அதிக வழக்குகளை கையாளும் காவல்நிலையங்களில் கூடுதல் காவலா்களை நியமிக்க வேண்டும். போக்குவரத்து காவலா்களுக்கு உணவு, பழச்சாறு மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். 8 மணி நேரம் வேலை, வார விடுப்பு போன்றவற்றை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

