"தேமுதிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது! கூட்டணி யாருடன் என்பதை இப்போது சொல்ல முடியாது" - பிரேமலதா

 
பிரேமலதா பிரேமலதா

தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை தொண்டர்களே முடிவு செய்வர். தொண்டர்கள் எண்ணப்படியே கூட்டணி அமைக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Image

கடலூரில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் உரையாற்றிய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கடலூர் மாவட்டம் எப்போதும் விஜயகாந்தின் கோட்டை, விஜயகாந்த் விதைக்கப்பட்டிருக்கிறார். தனது சொந்த செலவில் இவ்வளவு தொண்டர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளார்கள். தேமுதிக கதை அவ்வளவுதான் என்று சொன்னவர்கள் எங்கே? ரசிகர் மன்றமாக தொடங்கி இன்று தேமுதிகவாக மாறியுள்ளது நமது இயக்கம். தேமுதிக தொண்டர்கள் ஒவ்வொருவரிடம் கேப்டன் விஜயகாந்தை பார்க்கிறேன். அவரின்றி நாம் இல்லை. தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது, தேமுதிக யாருடன் கூட்டணியோ அவர்கள் தான் ஆட்சியில் அமர முடியும். தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை தொண்டர்களே முடிவு செய்வர். தொண்டர்கள் எண்ணப்படியே கூட்டணி அமைக்கப்படும். ஆட்சியை தேமுதிக தீர்மானிக்கும். வெற்றி ஒன்றே தேமுதிகவின் கொள்கை. தமிழ்நாட்டில் தேமுதிகவுக்கு இணையான கட்சி வேறெதுவும் கிடையாது.

கூட்டணி கட்சிகள் தேமுதிகாவால் பலன் அடைகின்றன. ஆனால் வென்ற பின் அதிகாரத்தை கூட்டணி கட்சிகள் மறுக்கின்றன. யாருடன் கூட்டணி என முடிவெடுத்துவிட்டேன். மாவட்ட செயலாளர்களின் கடிதத்தை படித்துவிட்டு முடிவெடுத்தேன். தேர்தல் வந்தால் பேரம், பேரம் என்கிறார்கள். ஆமாம் பேசினேன், பேசினேன். யாரிடம் பேசினேன் தெரியுமா? எங்கள் நிர்வாகிகளிடம் பேசுவேன். தொண்டர்களிடம் பேசுவேன். ” என்றார்.