“அம்பியாக இருப்பார் திடீரென அந்நியனாக மாறுவார்”- சீமானை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்

 
பிரேமலதா விஜயகாந்த்

சட்ட விரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஜகபர்அலி குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தேமுதிகவினர் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “முதலமைச்சர் அமைச்சர் உள்ளிட்ட யாரும் ஜகபர் அலி குடும்பத்திற்கு ஆறுதலோ நிதியோ வழங்கவில்லை. அதிலிருந்து கனிமவளக்கொள்ளைகக்கும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உடந்தை இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது... தேமுதிக ஆர்ப்பாட்டத்திற்கு பிறகாவது ஒரு கோடி ரூபாய் நிதியை ஜகபர் அலி குடும்பத்திற்கு வழங்க வேண்டும். இந்த குற்றத்தை செய்த ஓட்டுனருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும் இதில் தொடர்புடைய ஆட்சியர் முதல் விஏஓ வரை அனைவருக்கும் சிறை தண்டனை வழங்க வேண்டும். வேங்கைவயல் செயல் தவறான செயல்... இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களே அவர்களுக்கு இது போன்ற செயலை செய்வார்களா இது திசை திருப்பும்படி உள்ளது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடுத்து தண்டனை தர வேண்டும். தவறு செய்தவர்கள் தப்பிக்க வழியே இல்லை என்று விஜயகாந்த் ஏற்கனவே கூறியுள்ளார், உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்.. அதேபோல் தற்போது வேங்கைவயல் வழக்கில் உண்மையான குற்றவாளிகளாக குற்றப்பத்திரிகை தாக்கலில் குறிப்பிட்டவர்களாகவே இருந்தால் அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்... அதை நான் மனப்பூர்வமாக ஏற்று தலை வணங்குகிறேன்.

சீமான் திடீரென்று அந்நியன் ஆகவும், திடீரென்று அம்பியாகவும் மாறுவார். அதனால் பெரியார் குறித்து அவர் பேசியதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே நான் கூறியுள்ளேன். விஜய் வெளியே வரவேண்டும், அவர் மக்களுக்கு செய்ய வேண்டிய நிறைய பணிகள் உள்ளது, அதனால் அவர் வெளியே வரட்டும். தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால் இன்னும் தேர்தல் கூட்டணி பேச்சை யாரும் தொடங்கவில்லை. அதனால் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறி வருகின்றனர், அவர்கள் சொல்லும் கருத்திற்கு என்னிடம் பதிலை எதிர்பார்க்கக் கூடாது,‌ நாங்கள் ஒரு கூட்டணியில் இருக்கின்றோம். எந்த கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உறுதியாக அறிவிப்போம்” என்றார்.