“கர்நாடகாவை கண்டித்து தமிழக அரசு அனைத்து கட்சியையும் கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்”

 
  பிரேமலதா!

நீதிமன்றத்திற்கு சென்ற பிறகும் நமக்கான உரிமையான தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக அரசு அனைத்து கட்சியையும் கூட்டி தமிழக விவசாயிகள் நலனை காக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

 பிரேமலதா

இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது மட்டும் அல்லாமல், முறைப்படி நீதிமன்றத்தையும் அணுகி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் உரிய நேரத்தில் அரசு பெற்று தர வேண்டும். இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் டெல்டா பகுதி முழுவதும் பாலைவனமாக மாறிவரும் நிலையில், விவசாயிகள் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. 

எனவே கர்நாடக அரசு தர மறுக்கும் தண்ணீரை உடனடியாக தமிழகத்திற்கு பெற்று நமது தமிழக விவசாய மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசினுடைய மிக முக்கிய கடமையாகும். எனவே நீதிமன்றத்திற்கு சென்ற பிறகும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியையும் கூட்டி தமிழக விவசாயிகள் நலனை காக்க மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசே முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.