கூட்டணிக்கு 2 கட்சிகளிடம் மாறி மாறி பேசி வருகிறோமா?- பிரேமலதா பதில்
தேர்தல் கூட்டணிக்காக, இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி பேசி வருகிறோம் என்பதில் உண்மை இல்லை என தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நேரில் பார்வையிட்டு பதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலைக் கழிவுகளால் மக்களின் அடிப்படை உரிமைகளான நிலம் நீர் காற்று ஆகியவை மாசு அடைந்திருக்கின்றன இதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும், 2023.ல் தமிழக அரசு அறிவித்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் சிப்காட் பிரச்சனைக்கு ஆளும் கட்சி ஆண்ட கட்சி இரண்டு காரணம் பொது நலனோடு இந்த பிரச்சனையை சிந்தித்து அணுக வேண்டும் பெருந்துறை சிப்காட் தொடர்பாக அரசு கொடுத்த வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பிரமலதா, திமுக அதிமுக என இரண்டு கட்சிகளுடன் கூட்டணிக்காக மாறி மாறி பேசி வருவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்தார். இன்று அனைத்துக் கட்சிகளுமே தோழமைக் கட்சிகளாக தான் இருக்கிறார்கள், அனைத்து கட்சிகளும் பாகுபாடு இல்லாமல் பழகுகிறார்கள், தேர்தல் வரும் போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பங்களின் படி தேமுதிக முடிவெடுக்கும். இந்த முறை மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம், அதை ஜனவரி 9.ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்பதில் தெளிவாக இருக்கிறோம் என கூறினார்.


