"2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்"- பிரேமலதா விஜயகாந்த்
தற்பொழுது அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு மிகப்பெரிய கூட்டணி அமைப்போம் என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார். முன்னதாக அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சந்ததிகளில் வழிபாடு செய்த அவருக்கு அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமதா விஜயகாந்த், “திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்துள்ளேன். குறிப்பாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தையும், பாலம் இடிந்து விழுந்த இடத்தையும் நேரில் பார்வையிட உள்ளேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கின்ற அனைத்து பிரச்சனைகளையும் இன்று மாலை நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் மக்களுக்கு தெரியப்படுத்த உள்ளேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகுந்த கேள்விக்குறியாக உள்ளது.
சின்ன குழந்தை முதல் பெரிய பெண்கள் வரை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இருந்து வருகின்றனர். இவை அனைத்தும் கண்டிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. தமிழக அரசு சட்ட ஒழுங்கை கையில் எடுத்து அனைவருக்கும் பாதுகாப்பை உருவாக்கித் தர வேண்டும். தற்போது இருக்கின்ற அதிமுகவுடனான கூட்டணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஓராண்டு காலம் உள்ளது. தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கட்சி வளர்ச்சிப் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய கூட்டணி அமையும்” என்றார்.