விஜய்யால் வாக்குகள் சிதறலாம்- பிரேமலதா விஜயகாந்த்

 
 பிரேமலதா

விஜய் நடித்த கோட் படம் இன்னும் பார்க்கவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

premalatha vijayakanth

சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையின் பூஜையில் தேமுதிக செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் இருக்கிறதா என மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அனைத்து துறைகளிலும் போராட்டங்கள் நடைபெறுவதால் இதனை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான். விஜய் நடித்த கோட் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எனவே படம் பார்த்துவிட்டு அது குறித்த கருத்தை நான் தெரிவிக்கிறேன். கச்சத்தீவை மீட்டெடுத்தால்தான் தமிழக மீனவர்களின் பிரச்சனை தீரும். அதை தாரை வார்த்து கொடுத்தது திமுக தான். அவர்கள் தான் தற்போதும் ஆட்சியில் உள்ளனர். எனவே கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. கட்சியின் மாநாடு தாமதம் அடைவதற்கு காரணம் என்ன என்பது குறித்து விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். தமிழக கல்வித்துறைக்கு நிதி ஒதுக்காதது குறித்து மத்திய கல்வித்துறை தான் பதிலளிக்க வேண்டும். அதேசமயம் அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்பதும் தாய் மொழியை காக்க வேண்டும் என்பதும் எங்களது கொள்கை.

விஜய் கட்சியால் திராவிட கட்சிகளின் வாக்குகள் சிதறுகிறதா இல்லையா என்று 2026 தேர்தலில் தான் தெரியும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருப்பது சிகிச்சைக்காகவா அல்லது முதலீடுகளை ஈர்க்கவா என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் அவர் தமிழகம் திரும்பியவுடன் எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று தெரிவித்தார்.