கிக்கு... சரக்கு... என்ன பேச்சு இது?- கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

 
 பிரேமலதா

குடியை கொடுத்து கோடியில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்துள்ளீர்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு எதற்கு நிதி? - பிரேமலதா விஜயகாந்த்

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “குடியை கொடுத்து கோடியில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரை பணயம் வைத்துள்ளீர்கள். மக்களாக பார்த்து திருந்தினால்தான் உண்டு என மூத்த அமைச்சர் கூறுகிறார்... அதுக்கு எதுக்கு இந்த ஆட்சி? அமைச்சரின் இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டப்பேரவையில், முதலமைச்சர் முன்னிலையில், ஒரு மூத்த அமைச்சர் சரக்கு என்றும் கிக் என்றும் பேசியுள்ளார். அப்படியென்றால் உங்களின் தரமில்லாத சரக்குதான் அவர்களை கள்ளச்சாராயம் குடிக்கும் நிலைக்கு தள்ளியது என ஒப்புக்கொள்கிறீர்களா? கள்ளச்சாராயம் நோக்கி யார் செல்ல வைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

கள்ளச் சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழ கூடாது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும், புதிய சட்டம் பாயுமா?. கள்ளச்சாராயத்தால் கடந்த ஆண்டே 22 பேர் உயிரிழந்துள்ளனர், அரசு இப்போது தான் விழித்துள்ளது. கல்வராயன் மலையில் ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் எந்த செயல்பாடுமின்றி முடங்கி உள்ளது” என்றார்.