சனாதனத்திற்கு அர்த்தம் யாருக்குமே தெரியாது- பிரேமலதா விஜயகாந்த்

நாட்டின் பெயரை மாற்றுவது கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “மக்களின் ரத்தத்திலும், உணர்வுகளிலும் இந்தியா என்ற வார்த்தை ஊறிப்போய் உள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் ஒரு நாட்டினுடைய பெயரை மாற்றுவது என்பது கண்டிக்கத்தக்கது. பாரத் பெயர் மாற்றம் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது மாதிரி இல்லை. இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள்? தேர்தல் ஆணையம் அதை ஏற்கக்கூடாது. நாட்டின் பெயரை மாற்றுவது என்பது எளிதல்ல, அது வரவேற்கக் கூடியதும் அல்ல
100 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் சாதியை ஒழிக்க வேண்டும் எனக் கூறினார். ஆனால் நடந்ததா? சனாதனத்திற்கு உண்மையான அர்த்தம் என்னவென்பது யாருக்கும் தெரியாது. தற்கால அரசியலை பேச வேண்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூறாண்டு காலத்திற்கு பின்னோக்கி உள்ளார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். வறுமை, லஞ்சம் ஊழல், குண்டும், குழியுமாக உள்ள சாலை, டாஸ்மாக் உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டும். அடுத்த தேர்தலுக்கான அரசியலை திமுக செய்கிறது. அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வதில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக சனாதனம் என்பதை திமுக கையில் எடுத்துள்ளது. புதிதாக அரசியலுக்கு வந்துள்ள உதயநிதி, பழைய அரசியலை செய்கிறார். அடுத்த தலைமுறையினர் நலன்களுக்காக ஆட்சியாளர்கள் வேலை செய்வதில்லை. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை” என்றார்.