ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதால் எந்த பயனும் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் தற்போது 2,000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாலும் எந்த பயனும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் புகழ்பெற்ற தர்பார்ண்யேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். இக்கோயிலுக்கு இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்களுக்கு தேமுதிக தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “ஆட்சிக்கு வந்து இரண்டு வருடத்தில் கருப்பு பணத்தை ஒழிக்க போவதாக சொல்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதும், தற்போது 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுகிறோம் என அறிவித்திருப்பதாலும் எந்தப் பயனும் இல்லை. இது கண்துடைப்பு நாடகம். கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தது. தற்போது காங்கிரசிற்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி அதிகமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. கேப்டனும் நானும் அந்த ஆட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். என்ன நிலைபாடு என்பதை உரிய நேரத்தில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிப்போம். கள்ளச்சாராயம் விவகாரத்தில் நேராக சென்று அனைத்து நோயாளிகளையும் சந்தித்தேன். விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய கொடுமையான விஷயம் நடந்திருக்கிறது. கேப்டன் நலமுடன் இருக்கிறார். எப்போது வர வேண்டுமோ, அப்போது வருவார்” என்றார்.