"கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதல்.. இபிஎஸ் செயல் ஒரு மோசமான முன்னுதாரனம்..” - திமுக எம்.எல்.ஏ எழிலன் கடும் தாக்கு..
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சை தொடர்ந்து, நிகழ்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தவறான முன்னுதாரணம் என்று திமுக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலரசன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நோயாளியை அழைத்துச் செல்ல முயன்ற 108 ஆம்புலன்ஸ் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “தமிழகம் சுகாதாரத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஆனால் நேற்று நடந்த சம்பவம் வருத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் உரியது. ஓட்டுநர் மற்றும் பெண் மருத்துவ ஊழியர் ஹேமலதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஹேமலதா கர்ப்பிணியாக இருந்தும் அவரை தாக்க முயன்றனர். இது மனிதநேயமற்ற செயல்.
108 ஆம்புலன்ஸ் சேவை இதுவரை கிட்டத்தட்ட 1 கோடி 92 லட்சம் பேருக்கு சேவை செய்து, 15 லட்சம் பேரின் உயிரை காப்பாற்றியுள்ளதாகவும், அந்த சேவையை தடுக்கும் செயல் மிகப்பெரிய குற்றமாகும். ஒரு பெண் மயங்கி விழுந்ததால் அவசரமாக ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. ஆனால், கூட்டம் நடந்த இடத்தில் சென்றபோது அதிமுக தொண்டர்கள் அவர்களை தடுத்து, அடையாள அட்டையை கிழித்து வீசி, வாகனத்தையும் சேதப்படுத்தினர். போலிசார் தலையிட்டு ஆம்புலன்ஸை மீட்டனர். விசாரணையில் உண்மையாகவே நோயாளி இருந்தது உறுதி செய்யப்பட்டது. அந்த நோயாளிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பதில் சொல்வர்?

எதிர்க்கட்சித் தலைவர் வாயில் வரும் ஒரு சொல் மக்களிடம் தவறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆம்புலன்ஸ் உள்ளே நோயாளியாக மாற்றி ஏற்றி அனுப்புங்கள்’ என்று ஒரு அரசியல் தலைவர் சொல்வது தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையே நடந்துள்ளது. இது ஒரு மோசமான முன் உதாரணம். தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்போம் என்று பேரணி நடத்திவிட்டு, அடிப்படை உயிரை கூட காக்காமல் இப்படிப்பட்ட செயல் செய்வது தலைகுனிவை உண்டாக்கும்.
இதேவேளை, அனைத்து கட்சிகளும் பொதுக்கூட்டங்கள் நடத்தும் போது அவசர மருத்துவ சேவைகள் தடையின்றி செல்ல வழிவிட வேண்டும் என்றும், . மக்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை என்பதை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச் செயலாளராக இருக்கிறார்; ஒரு தலைவராக தமிழக மக்களின் அக்கறையுடன் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவரது கடமை” என்று அவர் தெரிவித்தார்.

