மருத்துவர் இல்லாததால் வயிற்றில் குழந்தையுடன் உயிரிழந்த கர்ப்பிணி! தூத்துக்குடியில் சோகம்

 
ழ்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் பரிதாபமாக வயிற்றில் குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிரா. இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் நடைபெற்று,  நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜாகிரா இரண்டாவதாக கர்ப்பம் தரித்துள்ளார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை அருகே உள்ள சிறுபாடு கிராமத்திற்கு தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜாகிரா, புதுக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருவுற்றதிலிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு ஜாகிராவிற்கு பிரசவ வலி வந்ததை தொடர்ந்து ஜாகிராவின் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் ஜாகிராவை பிரசவத்திற்காக புதுக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். ஆனால் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லாத நிலையில் இரண்டு செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது, ‘தண்ணீர் குடம் உடைந்து விட்டது எனக்கூறி இனிமேல் தாயையும் சிசுவையும் காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றால்தான் காப்பாற்ற முடியும்’ எனக்கூறி அங்கிருந்து அனுப்பி விட்டனர். 

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட தாயும், சேயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதைத் தொடர்ந்து ஜாகிராவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து இதற்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய பதிலளிக்க வேண்டுமென கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் ஜாகிராவின் கணவர் கோபியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறந்த ஜாகிராவின் உடலை பெற்றுக் கொள்வதாக கையெழுத்து வாங்கி உடலை ஒப்படைத்தனர். தூத்துக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.