தமிழக அரசியலில் பரபரப்பு : விரைவில் தமிழக அமைச்சராகிறாரா பிரவீன் சக்ரவர்த்தி..?

 
1

சென்னையை பூர்விகமாக கொண்ட பிரவீன் சக்கரவர்த்தி, பொருளாதார வல்லுநராகவும், தரவு மேலாண்மை ஆய்வாளராகவும் அறியப்படுபவர். பிட்ஸ் பிலானியில் பொறியியல் கல்வியும், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்ற பிரவீன் சக்கரவர்த்தி, பிரபல ஐபிஎம், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார்.


2009-ஆம் ஆண்டு முதல் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு குழுக்களில் பிரவீன் பணியாற்றியுள்ளார். 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். அதன்பின்னர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் முழு நேர அரசியல்வாதியாக பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னர் பல்வேறு குழுக்களில் இடம்பெற்ற பிரவீன் சக்கரவர்த்தி, 2019 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் முக்கிய பணியாற்றியவர். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்த போதும், பிரவீன் மீது ராகுல் காந்தி வைத்த நம்பிக்கை குறையவில்லை. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவராக பிரவீன் சக்கரவர்த்தியை நியமித்தார் ராகுல் காந்தி. அதற்கு முன்பாக அப்பதவியை வகித்தவர் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் பிரவீன் இருக்கிறார். இதனால் அவரின் கருத்து எப்போதும் உற்று கவனிக்கப்படுவது வழக்கம். மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியலிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சக்கரவர்த்தி. இதன் காரணமாகவே அவர், கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட முயற்சி செய்தார். காங்கிரஸ் மேலிடம் முழு சம்மதம் தெரிவித்தாலும், திமுக தலைமை ஒப்புக்கொள்ளாததால் அவர் போட்டியிட முடியாமல் போனதாகவும் சொல்லப்படுவதுண்டு.


தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, த.வெ.க.,வுடன் காங்., கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர் பிரவீன் சக்ரவர்த்தி. த.வெ.க., வெற்றிக்கு பின், விஜய்க்கு ஆதரவு தர ராகுலை நிர்ப்பந்தித்தவர் இவர். முதல்வர் விஜயுடன் நெருக்கமாகி விட்டாலும், ராகுலின் புதிய ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.இதனால், இவருக்கு தமிழகத்திலிருந்து ராஜ்யசபா பதவி கிடைத்தது. தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட விரும்புகிறாராம் பிரவீன் சக்ரவர்த்தி. எம்.பி.,யாக இருப்பதை விட, தமிழக எம்.எல்.ஏ.,வாக இருந்தால், அமைச்சராகி விடலாம் என்பது இவரது ஆசை. இதை ராகுலும் ஆதரிக்கிறாராம்.

பிரவீன் சக்ரவர்த்தி பிலானியில் உள்ள பல்கலையில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில், எம்.பி.ஏ., பட்டமும் பெற்றவர். உலக புகழ் பெற்ற, 'ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட்' நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார். இவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணரும் கூட.இவர், தன் அமைச்சரவையில் இருந்தால் நல்லது என, தமிழக முதல்வர் விஜயும் விரும்புவதாக சொல்லப்படுகிறது. காங்., தரப்பிலிருந்து இருவர் இப்போது அமைச்சர்களாக உள்ளனர். இதில் ஒருவருக்கு பதிலாக, பிரவீன் சக்ரவர்த்தி அமைச்சராக வாய்ப்பு உள்ளதாம். எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, தற்போது காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிடவும் தயாராக உள்ளாராம் பிரவீன்.