'பிரஜ்வாலா' வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் என்னென்ன?
பாலியல் தொழிலில் திணிக்கப்பட்ட பெண்களை மீட்கும்போது, போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் பெண்கள், மீட்கப்பட்டு பின் கண்ணியமாக வாழ்வதற்கான வழிகளை அமைத்து தர வேண்டும் என கோரி, 'பிரஜ்வாலா' என்ற சமூக நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. கடந்த 2004ம் ஆண்டு முதல் இவ்வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, 'பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு திட்டம்' என்ற முக்கியமான வழிகாட்டுதல்களை நேற்று வழங்கியது. இந்த புதிய பாதுகாப்பு திட்டம் ஆறு முக்கியமான கோட்பாடுகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், போலீசார் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியது. அதன் விபரம்:
பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் மற்றும் தனியுரிமை அனைத்து இடங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை வெளியிடக் கூடாது.
போலீசாருக்கான கட்டுப்பாடுகள்
* மீட்கப்பட்ட பெண்களை, எந்த சூழ்நிலையிலும் இரவு நேரத்தில், போலீஸ் ஸ்டேஷனிலோ அல்லது கடத்தல் தடுப்பு பிரிவு மையங்களிலோ தங்க வைக்கக் கூடாது
* மீட்கப்பட்ட பெண், பெரியவராக இருந்தால், மாஜிஸ்திரேட் முன்பும், வயது குறைந்த நபராக இருந்தால், குழந்தைகள் நல குழு முன்பாகவும் ஆஜர்படுத்த வேண்டும்
* வயது குறித்த சந்தேகம் எழுந்தால், அவர்களை குழந்தையாகவே கருத வேண்டும்
* பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறார்களா? இல்லையா? என்பதை பொறுத்து அவர்களுக்கான பாதுகாப்பை குறைக்க கூடாது
* மீட்கப்படும் பெண்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கக் கூடாது. குற்றவாளிகளிடம் இருந்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவசர மருத்துவ உதவிக்கு முன்னுரிமை தர வேண்டும்
* மாவட்ட அளவில் உள்ள ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவுகள், இனி டி.எஸ்.பி., அந்தஸ்து கொண்ட அதிகாரியால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும்
* ஒவ்வொரு கடத்தல் தடுப்புப் பிரிவிலும் குறைந்தது இரு பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் இடம் பெற வேண்டும்.
* மீட்புப் பணியின்போது ரகசிய அறைகள், கூரைகள், கழிப்பறைகள் என அனைத்து இடங்களையும் தீவிரமாக சோதிக்க வேண்டும்.
* மனித கடத்தலில் ஈடுபடுவோர், பாலியல் தொழிலுக்காக பெண்களை விலை கொடுத்து வாங்குவோர், விற்பனையாளர்கள், அவர்களுக்கு நிதியுதவி செய்வோர் போன்ற விபரங்கள் அடங்கிய தரவுத்தளம் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் அதை ஏ.டி.ஜி.பி.,க்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மனித கடத்தல்களை தடுக்க மத்திய அரசு விரிவான சட்டம் இயற்ற வேண்டும். அதே நேரத்தில், சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தோரை அடையாளம் கண்டு, அவர்களை தேவையின்றி, இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி அலைகழிக்கக் கூடாது.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

