சாகும்வரை வேலை செய்த சோகம்! மின்சாரம் தாக்கி உயிரிழந்த விசைத்தறி கூலி தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விசைத்தறி கூட மின்சாரம் தாக்கி விசைத்தறி கூலி தொழிலாளி பலி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கண்ணகி நகர் பகுதியில் சண்முகம் என்பவர் விசைத்தறி கூடம் அமைத்து தொழில் செய்து வருகிறார். இவரது விசைத்தறி கூடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கூலிக்கு விசைத்தறி இயக்கி வந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு வேலைக்கு வந்தவர் காலைமுதல் விசைத்தறி இயக்கி வந்த நிலையில் காலை 8 மணி அளவில் மின்சாரம் தாக்குவதாக சண்முகத்திற்கு தாக்குவதாக புகார் தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரீசியன் வரச் சொல்வதாக சண்முகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து ராஜா விசைத்தறி இயக்கி உள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக ராஜாவின் கால் பகுதியில் மின்சாரத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அப்பொழுது அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த மரகதம் என்பவர் மின்சாரத்தை துண்டித்து அருகில் உள்ளவர்களை அழைத்து ராஜாவை மீட்டு உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

