பள்ளி திறப்பை தள்ளி வைக்கவும்.. ரூ.2000 நோட்டு வாபஸ் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் - சீமான் கிண்டல்..

 
seeman

2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது யானைக்கு டவுசர் தைத்த கதைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் கிண்டலாக தெரிவித்துள்ளார்.  
 
முத்தரையர் நினைவு நாளை முன்னிட்டு புதுவை-கடலூர்  100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்படத்திற்கு சீமான் மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஷ சாராய விவகாரத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவி விலகி இருக்க வேண்டும். விஷ சாராயத்திற்கு அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும். கொடநாடு கொலைக்கு எடப்பாடி பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் தார்மீக பொறுப்பு என்பது இல்லை. எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் மக்கள் சாகவில்லை. இப்போது சாராயத்துக்கு பலர் இறந்துள்ளனர். ஆட்சியாளர்களை தேர்வு செய்தது மக்கள். அவர்கள்தான் இனி முடிவு செய்வார்கள். ஆளுநரிடம் அ.தி.மு.க.வினர் கடிதம் கொடுக்கின்றனர். அப்படியென்றால் கொடநாடு கொலை விசாரணைக்கும் கடிதம் தரலாமா? 

 ₹2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது RBI!

 தமிழக முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு ஏற்கனவே பலமுறை சென்றுள்ளார். அவர் சென்றதால் என்ன முதலீடு பெற்றார்? தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை. புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை தொடங்குகின்றனர். இதில் நமது பாட்டனார் பற்றிய வரலாறு வருமா? தமிழ் இருக்கு என சொல்கிறார்கள். எங்கே இருக்கிறது? 12 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. தமிழ், தமிழ் என கூறுகிறீர்கள். இரு தலைமுறை தாய்மொழியே இல்லாமல் வளர்ந்து விட்டது. தமிழ் எங்கு வாழ்கிறது? இதுதான் திராவிட மாடலா? நீண்ட காலமாக சூழ்ச்சி செய்து தமிழனை ஏமாற்றி விட்டார்கள். தமிழ் வாழ்க என மாநகராட்சியில் எழுதினால் போதுமா? கோப்பில் தமிழ் வேண்டாமா? கொஞ்ச நாளைக்கு இந்த கொடுமை போகும். 

school

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழைத்தேடி பயணம் செல்கிறார். காலம் கடந்து விட்டது. ஒரு கடைத்தெருவில்கூட தமிழில் பெயர் பலகை இல்லை. ஒரு வானூர்தியில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார் என அனைவரும் கைதட்டினார்கள். தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு. டாக்டர் ராமதாஸ் 80 வயதிலும் தமிழை தேடி செல்கிறார், அவரை பாராட்டுகிறேன். அடுத்து வருபவர்கள் இதை தொடர வேண்டும். வெயில் தொடர்ந்து கடுமையாக நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீடிக்க வேண்டும். 

மரணமடைந்த விவசாயிகள், இலங்கை தமிழர்கள் கொலை, பல கொடிய சம்பவங்களுக்கு தமிழக அரசு தொகை கொடுத்ததா? தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கும் 10 லட்சம். விஷ சாராயத்திற்கும் 10 லட்சம் என்பது என்ன நியாயம்? காய்ச்சுவதே அவர்கள் என்பதால் பணம் கொடுத்து மறைக்க பார்க்கிறார்கள். இனி மனமுடைந்தால் விஷம் குடிக்க தேவையில்லை. கள்ளசாராயம் குடித்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும். ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்ப பெறுவது பைத்தியக்காரத்தனம். வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது” என்று விமர்சித்துள்ளார்.