தென்காசி முழுவதும் முழுக்க SP ஸ்டாலினுக்கு போஸ்டர்!
தென்காசிக்கு புதுசா வந்திருக்கிற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு, வந்த சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கிறது.
தென்காசியின் அடையாளமே அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் தான். அந்த கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகள் - அதாவது தேர் ஓடும் வீதிகள் - நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பில் இருந்தது. கடைகள், வண்டிகள், தற்காலிக ஷெட்டுகள் என ரோடு முழுக்க அடைத்து, பக்தர்கள் நடந்து போகவே முடியாத நிலை இருந்தது. தேர் திருவிழா நேரத்தில் மட்டும் இல்லை, சாதாரண நாட்களிலும் கூட வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கோயிலுக்கு போக பெரும் சிரமம். இதைப் பார்த்த புதிய SP ஸ்டாலின், உடனடியாக களத்தில் இறங்கினார்.
காவல்துறையினர் மூலம் ரத வீதிகளில் இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. இப்போது பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு சென்று வர முடிகிறது. வாகனங்கள் ஒழுங்காக செல்ல முடிகிறது. தேர் வீதி பழையபடி அகலமாக, சுத்தமாக மாறியுள்ளது. பொதுமக்கள் பயமின்றி நடந்து செல்ல முடிகிறது. இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தென்காசி நகர் பகுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டிகளில், "தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி! காசிவிஸ்வநாதர் கோயில் ரத வீதி ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்தமைக்கு பாராட்டுகள்!"என்று எழுதப்பட்டுள்ளது. பொதுவாக போலீஸ் அதிகாரிகளை எதிர்த்து தான் போஸ்டர் ஒட்டுவார்கள். ஆனால் தென்காசியில், பாராட்டி போஸ்டர் ஒட்டியிருப்பது தான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

