பதவிவெறி பழனிசாமியே அதிமுவை விட்டு வெளியேறு! தேனியில் பரபரப்பு போஸ்டர்

 
eps


தேனிமாவட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை  ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. 

அந்த போஸ்டரில் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நீக்கிவிட்டு பொய்வேஷம் போடும் பதவிவெறி பழனிச்சாமியே! அ.தி.மு.கவை விட்டு வெளியேறு” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் தேனி மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி என்றும், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் சையதுகான்,  எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் பெயருடன் அச்சிடப்பட்டு இருந்தது. இந்த போஸ்டரை கண்ட ஈபிஎஸ் அணியை சேர்ந்த அ.தி.மு.கவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயருக்கு களங்கத்தை விளைவிக்கும் வகையில் அவதூறாக போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அதிமுகவினர் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை, வருசநாடு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.