ஈரோட்டில் தபால் வாக்கு பதிவு நிறைவு- 246 பேர் வாக்களிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நிறைவடைந்தது. 256 வாக்காளர்களில் 246 பேர் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 433 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெற தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி இந்த தொகுதியில் தகுதியுள்ள 1570 மாற்றுத்திறன் மற்றும் 2529 முதியோர்களில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 209 பேரும், மாற்றுத்திறனாளிகள் 47 பேரும் என 256 பேர்
இதற்காக 12-D படிவம் கொடுத்து விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த 256 பேரின் வீடுகளுக்கு தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்குச்சீட்டு முறையில் வாக்குகளை பெறும் பணி கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதற்காக, தலா 2 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர், துப்பாக்கி ஏந்திய போலீசார் அடங்கிய 4 குழு அமைக்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டன. தபால் வாக்குகளுக்கான படிவத்தில் கையொப்பம் பெற்ற பின் வேட்பாளர் பெயருடன் சின்னம் பொறித்த தபால் வாக்குச்சீட்டு தரப்பட்டு தற்காலிக தடுப்பு மூலம் மறைவாக வாக்குச்சீட்டில் வாக்கை பதிவு நடைபெற்றது.
அதிகாரிகள் எடுத்து செல்லும் பெட்டிகளில் வாக்கு சீட்டை சேகரிக்கப்பட்டன. கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இந்த பணி இன்றுடன் நிறைவடைந்தது. 256 பேரில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் வெளியூர் சென்றதால் 246 பேரிடம் வாக்குகள் பெறப்பட்டன. தபால் வாக்குகள் பெறும் பணி நிறைவடைந்ததையடுத்து வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வைப்பறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. பிப்ரவரி 5.ம் தேதி 237 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்று 8.ம் தேதி வாக்குகள் எண்ணும் போது, அவற்றுடன் இந்த தபால் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.