"அஞ்சல் ஆய்வாளர் பதவி உயர்வு தேர்வு தேதிகளை மாற்றிடுக" - மதுரை எம்.பி.,யின் வேண்டுகோள்!!

 
mp

பொங்கல் விழாக் காலத்தில் நடைபெறவுள்ள அஞ்சல் ஆய்வாளர் பதவி உயர்வு தேர்வுகளை மாற்றியமைக்க கோரி மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

"இந்தியா போஸ்ட்" பொது இயக்குனர்  அலோக் சர்மாவுக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் , அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் ஜனவரி 15, 16 - 2022 தேதிகளில் நடத்தப்படவுள்ளன. உழவர் திருநாளினை தமிழக மக்கள் பெருமகிழ்வோடு கொண்டாடும் பொங்கல் விழாக் காலத்தில் தேர்வுத் தேதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் நீளும் இக் கொண்டாட்டம் தமிழ் மக்களின் வாழ்வோடும், பண்பாடோடும் பின்னிப் பிணைந்தது ஆகும். எல்லோரும் சொந்த ஊர்களுக்கு, சொந்த கிராமங்களுக்கு போய்க் கொண்டாடித் திரும்புவார்கள்.

su venkatesan

அஞ்சல் ஆய்வாளர் பதவி உயர்வு தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 பொங்கல். ஜனவரி 15, 16 நாட்களும் மாட்டு பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகின்றன. சென்னையில் மட்டுமே தேர்வு மையம். சென்னைக்கு வெளியே இருப்பவர்கள், ஊருக்கு செல்லும் ஊழியர்கள் அதாவது தேர்வர்கள் ஜனவரி 14 அன்றே கிளம்பினால் தான் சென்னை வந்து சேர முடியும். தொடர் விடுமுறையில் பயணமே சிரமப்படும். முதல் நாள் இரவு முழுவதும் பயணித்து மறு நாள் தேர்வு எழுத வேண்டும். தேர்வு எழுதுவதற்கான மன நிலையை இதுவெல்லாம் பாதிக்காதா?ஏற்கெனவே டிசம்பர் 18, 19 - 2021 தேதிகளில் நடை பெற்றிருக்க வேண்டிய தேர்வுகள்தான். தள்ளி வைக்கப்பட்டு நடைபெறுகிறது. புதிய தேதியை தீர்மானிக்கும் போதாவது இவ்வளவு முக்கியமான விழாக் காலத்தை கணக்கில் கொண்டிருக்க வேண்டாமா? தமிழ் மக்களின் உணர்வையும், தேர்வர்களின் சிரமங்களையும் கணக்கில் கொண்டு தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.