வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை? முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!!

 
cm stalin

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  குறிப்பாக விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கும் நடைமுறையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது 1,800ஐ கடந்துள்ளது.  அத்துடன் 121  இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

stalin

இந்த சூழலில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  இந்த ஆலோசனையில் தொற்று அதிகமாக உள்ள இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.  சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

stalin

இந்நிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கடை நேரம் குறைப்பு, பள்ளி ,கல்லூரிகளில் நேரடி வகுப்பை ரத்து செய்வது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும், ஒமிக்ரான் அதிவேக பரவல் காரணமாக  பல்வேறு கட்டுபாடுகள் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.