மத ரீதியிலான பிளவுக்கு வழிவகுக்கும் பாஜக - பூவை ஜெகன் மூர்த்தி குற்றச்சாட்டு

 
Poovai Jegan Moorthi

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசினை புரட்சி பாரதம் கட்சி சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம் என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தினை தேர்தல் காரணமாக மட்டுமே தற்போது பாசிச பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. மக்களிடையே பிரிவினைவாதத்தை உண்டாக்க வேண்டும், தேர்தலின் போது மத ரீதியிலான அசாதாரண சூழலை உண்டாக்கி பலனடைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே பாஜக இதனை செய்துள்ளது. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் ஏற்படும் அநீதியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

சொந்த நாட்டிலேயே இஸ்லாமியர்கள் இரண்டாம் நிலை குடிமக்களாக வாழும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடியுரிமை சட்டத்தினை நீக்குவதற்கு ஜனநாயக முறையில் புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.