“இளைஞர் விஜய் பக்கம் இல்லை... உதயநிதி பக்கம்தான் இருக்கிறார்கள்”- அமைச்சர் பொன்முடி
திருக்கோவிலூர் அருகே இளைஞர்கள் த.வெ.க பக்கம் இல்லை, இளைஞர்கள் திமுக பக்கம் உதயநிதி பக்கம் தான் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் இன்று 125 வாலிபால் அணியினருக்கும், 100 கபடி அணியினருக்கும் என 3000 விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சீருடைகளை, தமிழ்நாடு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான பொன். கௌதம சிகாமணி தனது சொந்த செலவில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, “2026 இல் இளைஞர்கள் த.வெ.க பக்கம் இல்லை. இளைஞர்கள் என்றும் திமுகவின் பக்கம் உள்ளார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் அதே போன்று இப்போது உதயநிதி அவர்களின் பார்வையிலேயே இருக்கிறார்கள் என்பதைத்தான் இன்று காலை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நாம் பார்க்கலாம்” என்றார்.

