பிரபாகரனுடன் இருப்பதுபோன்ற டூப்ளிகேட் போட்டோவை எடிட் செய்து வெளியிட்டவர்தான் சீமான்- பொன்முடி

பெரியார் குறித்து பேசினால் தன் பெயர் தொலைக்காட்சிகளில் வரும் என்பதால் சீமான் பெரியார் குறித்து பேசி வருவதாகவும், டூப்ளிகேட் போட்டோ எடுத்து பிராபகரனோடு இருப்பது போல் உருவாக்கியவர் அவர், இது ஒரு பிரச்சார யுக்தி என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையை வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கியது கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பயணப்படி (டி, ஏ)பிடித்தம் செய்தது ஓட்டுனர் நடத்துனர்களுக்கு நாளை முதல் வழங்கபட உள்ளது. விழுப்புரம் போக்குவரத்து கழகங்களில் உள்ள 13 டெப்போக்களில் போக்குவரத்து கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் ஓய்வெடுக்க 8 டெப்போக்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
பெரியார் குறித்து சீமான் விமர்சிக்கிறார். அவரெல்லாம் இரு ஆளே இல்லை. ஆகையால் அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் மனசாட்சியோடு சிந்தித்தால் புரியும். டூப்ளிகேட் போட்டோ எடுத்து பிரபாகரனோடு இருப்பது போல உருவாக்கியவர் தான் சீமான். பிரபாகரனே பெரியார் குறித்து சிறப்பாக பேசியுள்ளார். திராவிடம் என்பது இனம், தமிழ் மொழி இங்கே இரண்டும் செயல்படுவது தான் நம்முடைய திராவிடம் மடல் ஆட்சி. திராவிட மாடல் வளர்ச்சியை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. இது தமிழர்களின் ஆட்சி, தமிழர்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி, தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு காரணமாக இருந்தவர் பேரறிஞர் அண்ணா தான். இந்தி உள்ளே நுழையக்கூடாது, தமிழ் மொழி காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இளைஞர்கள் பலர் உயிர்நீத்துள்ளனர். யாரோ சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. இப்படி ஏதாவது பேசினால் தன்னுடைய பெயர் தொலைக்காட்சிகளில் வரும் என்பதால் சீமான் பேசிவருகிறார். இது ஒரு பிரச்சார யுக்தி. பெரியாருக்கும், திமுகவுக்கும் எந்த தீங்கும் வராது. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடப்பது தான் இந்த ஆட்சி, யாரும் மறுக்க முடியாது” என்றார்.