ரூ.199- க்கு பொங்கல் தொகுப்பு- கூட்டுறவுத்துறை அறிமுகம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சிறப்பு அங்காடியில் கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், “பொது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருள் தருவதே கூட்டுறவு துறையின் நோக்கம். இத்துறையின் சார்பாக பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று வகையான சிறப்பு திட்டம் அறிமுகம் செய்துள்ளோம்.
199 ரூபாய்க்கு பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்டது இனிப்பு பொங்கல் தொகுப்பாகவும், 499 ரூபாய்க்கு மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் 19 பொருட்கள் கொண்டது கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பாகும் விற்கப்படுகிறது.
மேலும், 999 ரூபாய் மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் கொண்ட தொகுப்பும் உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதமர் பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனை சாலைகளில், சுய சேவை பிரிவு விற்பனை நிலையங்களில் இந்த சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை இருக்கும். தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை அதிரசம், முறுக்கு போன்ற பொருள்கள் செய்ய விற்பனை தொகுப்புகள் வைக்கப்பட்டன எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு இருந்தது விற்பனை இருந்தது, குறிப்பாக கூட்டுறவுத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்ட பட்டாசுகளை பொறுத்த வரை 21 கோடி வரை விற்பனையாகி இருக்கிறது. அதேபோல் இந்த பொங்கலுக்கு விற்பனை தொடங்கி இருக்கக்கூடிய இந்த மூன்று சிறப்பு தொகுப்பின் விற்பனையும் அதிகமாக இருக்கும் என்றார். பொது மக்களுக்கு இல்லை என்று சொல்லாத அளவுக்கு பொருட்கள் கிடைக்கும்.
ரேசன் கடைகளில் 3440 காலி பணியிடங்களுக்கு இரண்டு லட்சத்து 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் விரைவில் பணி நியமன ஆணை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கூட்டுறவுத்துறை சார்பாக 58 பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் 50 கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது, மத்திய அரசோடு கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் அங்கு ஸ்டால் வைத்து இந்த விற்பனை தொகுப்புகளை கொடுக்கலாம் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
மண்பாண்ட தொழில் செய்பவர்களுக்கு பேர் போன இடமாக மானாமதுரை உள்ளது 500 குடும்பங்கள் வரை இந்த தொழிலை நம்பி உள்ளனர் அவர்களுக்கு மூலப் பொருளாக களிமண் எடுப்பதில் இருந்த தடையையும் முதலமைச்சர் நீக்கி இருக்கிறார். அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு எந்த இடையூறும் இல்லாமல் பணிகளை செய்து வருகிறார்கள். பல வகையான பொருள்களை செய்து ஏற்றுமதி கூட செய்து வருகிறார்கள், தேவைப்பட்டால் கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.