தமிழகத்தில் களைகட்டிய தைப்பொங்கல் கொண்டாட்டம்... பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்...

 
பொங்கல் 2022


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை  இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புத்தாண்டு , தீபாவளி என என்னதான் நாம் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடினாலும், பொங்கல் பண்டிகை  தமிழர்களுக்கே உரித்தான மிக முக்கியமான விழாவாக இருந்து வருகிறது.. இந்த பண்டிகையின் போது  போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள்  தமிழர்களிம்  வீடுகளில் விழாக்கோலம் பூண்டிருக்கும்..   அறுவடைத் திருநாளாக  கொண்டாடப்படும் பொங்கல் விழாவில், விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும் ஆதி பகவன் சூரியன், கால்நடைகள்,  உழவுப் பொருட்களை கடவுளாக எண்ணி வழிபடுவர்.

பொங்கல்

பழையன கழிதலும்; புதியன புகுதலும் செம்மொழிக்கு  ஏற்ப நேற்று போகிப்பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில்,  தைப் பொங்கலான இன்று சூரியனுக்கு  நன்றி சொல்லும் விதமாக, அதிகாலையிலேயே  வீட்டு வாசல்களில் வண்ண வண்ண கோலமிட்டு, மாவிலை தோரணங்களால்  அலங்கரித்து, புத்தாடை அணிந்து பொங்கல் வரவேற்றனர்.  

பொங்கல்

புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி  புத்தரிசி, சர்க்கரை, வெல்லம், பால், நெய் போன்றவற்றை வைத்து  பொங்கல் செய்து சூரியனுக்கு படையலிட்டு வழிபாட்டனர்.  கொரோனா , ஒமைக்ரான் என்னும் நெருக்கடியான சூழல் இருந்தாலும் மக்கள் வீடுகளிலேயே பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் 2022

அதேபோல் பொங்கல் பண்டிகையை ஒட்டி  தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகின்றனர்.  வேலை நாட்களில் வெளியூர்களில் சொந்தங்களை பிரிந்து  வாழ்ந்து வரும் பலரும், பொங்கல் பண்டிகையை ஒட்டி தங்களது சொந்த ஊர்களுக்கு  படையெடுத்துள்ளனர்.  உறவுகளை இணைக்கும் இந்த பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மட்டுமின்றி,  தமிழர்கள் வாழும் மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட  உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல்