கொரோனா சிகிச்சை மையத்தில் பொங்கல் பண்டிகை - உற்சாகத்தில் கொரோனா நோயாளிகள்!!

 
ttn

கோவை கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகள் பொங்கல் பண்டிகையினை  கொண்டாடினர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில்   23,438 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 91 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் ஒரேநாளில்  26 பேர் உயிரிழந்த நிலையில்  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 956 ஆக அதிகரித்துள்ளது.

pongal

குறிப்பாக கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் என்பது அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.   தினசரி 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அம்மாவட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்,  அரசு மருத்துவமனைகள்,  இஎஸ்ஐ மருத்துவ மனைகள் ஆகியவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன் லேசான அறிகுறி உள்ளவர்கள் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதற்காக தற்போது 3500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு தற்போது வரை 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

pongal

இந்நிலையில் கோவை கொடிசியா கொரோனா  சிகிச்சை மையத்தில் கொரோனா  நோயாளிகள் ஒன்று சேர்ந்து கும்மியடித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.  பெருந்தொற்று காலத்தில்  தொற்றால் பாதிக்கப்பட்டு,  குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள், முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை  கடைப்பிடித்து , ஒன்றிணைந்து கரும்பு கட்டி பொங்கல் வைத்து, இறைவனை வழிபட்டு ,மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடியது  பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.