மோடி பெயர் பலகை உடைப்பு; கேஎஸ் அழகிரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்- பொன்.ராதா

மோடி பெயர் பலகை உடைக்கப்பட்ட உபகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கன்னியாகுமரி அருகே நரிக்குளம் பாலத்தில் அந்தப் பாலத்தின் திறப்பு விழா தொடர்பான பிரதமர் மோடி பெயர் இடம்பெற்றிருந்த பெயர் பலகை உடைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி மீது வழக்குத் தொடர வேண்டும். காவல் நிலையத்தில் பாஜக சார்பில் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் அவரது பெயரை பதிவு செய்யாமல் யாரோ உடைத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராகுல் காந்தி வருகை தொடர்பாக கே.எஸ். அழகிரி ஒரு வார காலம் குமரி மாவட்டத்தில் தங்கியிருந்து திட்டமிட்டுள்ளார். 1947 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது இப்பொழுது போய்விடுமோ என்ற அச்சம் இவர்களுக்கு வந்துள்ளது. 1969 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. இப்பொழுதும் மீண்டும் ஒரு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சோனியா காந்தி குடும்பத்திற்கு எதிர்ப்பு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் தற்பொழுது மிகப்பெரிய குழப்பம் நிலை வருகிறது. அந்த பிரச்சனையை மறைக்கத்தான் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்” என தெரிவித்தார்.