"எடப்பாடியா? ஸ்டாலினா?"– யார் முதல்வர் என்பதை விஜய்தான் தீர்மானிப்பார்..! அதிரவைக்கும் கருத்துக்கணிப்பு :

 
1

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 40 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும் என மட்ரைஸ் ஐஏஎன்எஸ் கணித்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 38 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அதிமுக கூட்டணி 127 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள நிலையில், திமுக கூட்டணி 104 முதல் 114 இடங்களை மட்டுமே பெற்று, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் திணறும் எனக் கூறப்படுகிறது.

இந்தத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 15 சதவீத வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. குறிப்பாக, திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் விரும்பாத நடுநிலை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை விஜய் அறுவடை செய்வார் என்றும், இது தேர்தலில் ஒரு புதிய அலைக்கு வித்திடும் என்றும் இக்கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் தவெக பெறும் வாக்குகள், ஆளுங்கட்சிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. திமுக மீதான அதிருப்தி வாக்குகள் வழக்கமாக எதிர்க்கட்சியான அதிமுகவிற்குச் செல்லாமல், விஜய்யை நோக்கித் திரும்புவதுதான் இந்தத் தேர்தலின் மிகமுக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக பல தொகுதிகளில் திமுக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிடும் சூழல் உருவாகியுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் யார் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் 'கிங் மேக்கராக' (King Maker) விஜய் இருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கும் இடையே விஜய் பெறும் 15 சதவீத வாக்குகள், ஆட்சியதிகாரத்தின் சாவியாக மாறும் என மட்ரைஸ் கணிப்பு உறுதிப்படுத்துகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவும் இதே கருத்தைப் பதிவு செய்திருந்தார். ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரில் யார் முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதை முடிவு செய்யும் சக்தியாக விஜய் இருப்பார் என அவர் குறிப்பிட்டிருந்தது, தற்போது வெளியாகியுள்ள இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளுடன் ஒத்துப்போவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.