ஆலங்குளத்தில் பயங்கரம்! கள் இறக்கிய நபரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்

 
ஆலங்குளத்தில் பயங்கரம்! கள் இறக்கிய நபரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, சட்டவிரோத கள் விற்பனை குறித்த சோதனையின் போது ஏற்பட்ட மோதலில், பனைத் தொழிலாளியை காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிரவைத்துள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர், கண்டபட்டி, காத்தபுரம், நாலாங்குறிச்சி, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான பனை மரங்களில் இருந்து பனைத் தொழிலாளர்கள் பதநீர் இறக்கி விற்பனை செய்வது வழக்கம். இவர்களில் சிலர் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமாக கள் இறக்கியும் விற்பனை செய்யப்படுகிறது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா சாதாரண உடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அங்குள்ள பெருமாள் சேட் என்பவரது மகன் மணிகண்டன் (35) வீட்டில் சோதனை செய்தபோது கள் ஏதும் சிக்கவில்லை.

இதையடுத்து, மணிகண்டனை அவர் தொழில் செய்யும் பனை மரத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்யுமாறு எஸ்.ஐ வற்புறுத்தியுள்ளார். மரத்தில் ஏறிப் பார்த்துவிட்டு "கள் இல்லை" என மணிகண்டன் கூறியபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் தரையில் விழுந்து கட்டிப்புரண்டு சண்டையிட்ட நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் கிடந்த பனை மட்டையால் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலைகுலைந்த எஸ்.ஐ இசக்கிராஜா, தற்காப்புக்காகத் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து மின்னல் வேகத்தில் மணிகண்டனை நோக்கிச் சுட்டார். மொத்தம் 10 ரவுண்டுகள் சுடப்பட்டதாகத் தெரிகிறது! இதில் 3 தோட்டாக்கள் மணிகண்டனின் இரண்டு கால்களையும் துளைத்துச் சென்றன. ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சரிந்து விழுந்தார். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு மணிகண்டனின் உறவினர்களும் ஊர் பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். தகவல் அறிந்து ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீஸ் படை விரைந்து வந்து, காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்தில் சிதறிக் கிடக்கும் மீதமுள்ள 7 தோட்டாக் குண்டுகளை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். எஸ்பி மயில் வாகனன் நேரில் விசாரணை நடத்தியுள்ளார். தொழிலாளி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மோதல் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக ஆலங்குளம் மற்றும் மருதம்புத்தூர் பகுதியில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தற்காப்பு நடவடிக்கையா அல்லது அத்துமீறலா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது, இதனிடையே பாதிக்கப்பட்ட மணிகண்டன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மருதம்புத்தூர் கிராம மக்கள் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.