பாஜக பேனர்களை அகற்றிய போலீசார்! கடலூரில் வாக்குவாதம்

 
கடலூரில் பாஜக பேனர்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நாளை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கடலூரில் நடைபெற உள்ளது. 

கடலூர் பாரதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இதில் தேசிய பொதுச்செயலாளர் சி டி ரவி மற்றும் மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கடலூர் நகரில் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் அதற்கான பேனர்களை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது மாநகராட்சி ஊழியர்கள் காவல்துறையுடன் இணைந்து அந்த பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே இதற்கான அனுமதி கேட்டு கடிதம் மாநகராட்சி மற்றும் காவல் துறையிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும் தற்பொழுது வந்து பேனர் வைக்க அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கரிடம் அதற்கான ஆவணங்களையும் அவர்கள் வழங்கினர். 

அதனை ஏற்றுக் கொண்ட காவல் துறை கண்காணிக்க கண்காணிப்பாளர் பேனர் வைக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து இதற்கான சர்ச்சை ஓய்ந்தது.