நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி!
Sep 8, 2024, 12:38 IST1725779312840
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் 23 ஆம் தேதி நடத்துவதற்கு காவல்துறை சார்பில் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியிலுள்ள வி.சாலையில் 23 ஆம் தேதி நடத்துவதற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் கடந்த 28 மனு அளித்தனர். மனுவினை ஆய்வு செய்த காவல் துறையினர் மாநாடு நடத்துவதற்கு நடைமுறை வழிகாட்டுதல் எதுவும் குறிப்பிடவில்லை என்பதால் 21 கேள்விகள் காவல் துறை சார்பில் கேட்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டன.
அதனை பெற்றுகொண்ட அக்கட்சியின் பொதுசெயலாளர் என். ஆனந்த் 21 கேள்விகளுக்கான பதில் விளக்கத்தினை 6 ஆம் தேதி கொடுத்தனர். அதனை தொடர்ந்து காவல் துறை அனுமதி தொடர்பாக இன்று நேரில் சந்திக்க தமிழக வெற்றிக்கழகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பின் பேரில் இன்று அக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, வழக்கறிஞர் அரவிந்த், சீல் இடப்பட்ட மாநாட்டிற்கான அனுமதி கடிதத்தினை டி எஸ் பி அலுவலகத்தில் டி எஸ் பி சுரேஷிடமிருந்து பெற்று கொண்டனர். மாநாடு நடைபெற காவல் துறை சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாநாடு நடைபெறும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்த வேண்டும்,முதியவர்கள்,பெண்கள் மாற்றுதிறனாளிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பார்கிங் வசிதிகள் எந்த வித குளறுபடிகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பன நிபந்தனைகள் காவல்துறை சார்பில் விதிக்கபட்டுள்ளன. இதனை தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.