’பை அழகாக இருந்ததால் எடுத்தேன்’- ஓடும் ரயிலில் அசந்து தூங்கிய பெண்ணிடம் காவலர் கைவரிசை

 
ச்

சென்னையில் ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் நகை பையை திருடிய காவலர் கைது செய்யப்பட்டார்.

இப்படியெல்லாம் கூட நடக்குமா? 3 புதிய ரயில் பெட்டிகள் திருட்டு!

மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். தோளில் மாட்டி இருந்த தனது பையில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை வைத்திருந்தார். இந்த நிலையில் வாலாஜாவில் ரயிலில் ஏறிய இளைஞர் ஒருவர், எதிரே அமர்ந்திருந்தார்.

பெண் கண்ணயர்ந்து தூங்கிய போது அவரது தோளில் மாட்டி இருந்த பையை யாரோ இழுப்பது போன்று உணர்ந்துள்ளார். பிறகு கண்விழித்து பார்த்தபோது எதிரில் அமர்ந்திருந்த இளைஞர், தன்னுடைய பையுடன் நிற்பதை பார்த்து இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இளம் பெண் கூச்சல் போட்டதுடன், அபாய சங்கிலியையும் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். இதையடுத்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகள் உதவியுடன்  அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் சென்னை ஓட்டேரி காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் டிரைவராக பணியாற்றும் முதல் நிலை காவலர் வசந்தகுமார் என்பது தெரியவந்தது. ரயிலில் பணியில் இருந்த போலீசார் வசந்தகுமாரை சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். வசந்தகுமாரை கைது செய்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பை அழகாக இருந்ததால் கைவரிசை காட்டியதாக காவலர், ரயில்வே போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.