கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம்...சிசிடிவி குறித்து காவல்துறை விளக்கம்
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், பரவும் சர்ச்சைக்குள்ளான சிசிடிவி தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைந்து லியா என்ற மூன்று வயது குழந்தை உயிரிழந்தது. தனது குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனிடையே அந்த பள்ளியில் பணிபுரியும் பெண், குழந்தை உயிரிழந்த சமயத்தில் கையில் ஒரு குழந்தையுடன் அங்கும், இங்கும் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், பரவும் சர்ச்சைக்குள்ளான சிசிடிவி தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சிசிடிவியில் உள்ள குழந்தை, அந்த பள்ளியில் பணிபுரியும் தமிழ்செல்வி என்பவரின் கைக்குழந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியை கையில் வைத்திருந்தது இறந்த குழந்தை லியா அல்ல, அது தமிழ்செல்வியின் குழந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு குழந்தையை கையில் வைத்து கொண்டு தேடிய நிலையில், அது லியா என தவறாக பரப்பப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.