அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீசில் புகார்

 
உதயநிதி ஸ்டாலின்

சனாதானம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மிசாவையே பார்த்தது திமுக; இதெற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்: உதயநிதி ஸ்டாலின்-  Dinamani

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். மத்திய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா திட்டத்தை திமுக எதிர்க்கும்.” என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை விமர்சித்து பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத்ஜிண்டால் புகார் அளித்துள்ளார். சனாதன தர்மத்திற்கு எதிராக இழிவான கருத்துகளை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.