ரூ.60 லட்சம் மோசடி- தவெக நிர்வாகி மீது போலீசில் புகார்

தேர்தல் செலவுக்கு ரூ.60 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக கோட்டகுப்பம் தவெக நிர்வாகி மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் அலி. மென்பொறியாளரான இவரும், அதே பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக கோட்டக்குப்பம் நகர செயலாளருமான முகமது கவுஸ் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் முகமது கவுசிங் மனைவி கோட்டகுப்பம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினராக உள்ளார். தேர்தல் செலவிற்கும், சாலை போடுவதற்கும் என்னிடம் இருந்து ரூபாய் 60 லட்சம் கடனாக பெற்று தற்போது கொடுத்த கடனை திருப்பி கேட்டால் பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி அடி ஆட்களை வைத்து மிரட்டுவதாக இன்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலத்தில் ஆஷிக் அலி த.வெ.க நிர்வாகி மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.*
அந்த புகாரில் தான் கடன் பெற்று அவருக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், அவருக்கு கொடுத்த பணம் வங்கி பரிவர்த்தனை மூலமாக கொடுத்துள்ளதனால் அதற்கான ஆதாரங்களையும் அதில் இணைத்துள்ளார். தற்பொழுது பணத்தை கொடுக்காமல் அடியாட்களை வைத்து மிரட்டும் த.வெ.க நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார். இதுகுறித்து த வெ.க நிர்வாகி முகமது கவுஸ்யிடம் கேட்டபோது, பணம் வாங்கியது உண்மைதான், ஆனால் பாதி பணம் கொடுத்து விட்டேன். மீதி பணமும் கொடுத்து விடுவேன், அதற்குள் என் மீது புகார் கொடுத்துள்ளார் என விளக்கம் கொடுத்துள்ளார்.