திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகித்த ஏ.ஆர்.நிறுவனம் மீது போலீசில் புகார்

 
ஏ.ஆர். நிறுவனம்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் வழங்கிய ஏ.ஆர். பால் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தின் மீது தேவஸ்தானம் நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு,  மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தரமற்ற நெய் காரணமாக , லட்டு தரம் மிகவும் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு, திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை கையில் எடுத்தார். இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்குவதற்காக டெண்டர் எடுத்துக்கொண்ட திண்டுக்கல்லை சேர்ந்த  ஏ.ஆர். பால் உற்பத்தி பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்த 4 டேங்கர்  நெய் சப்ளை செய்தனர். இதனால் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.