தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்துய போலீஸ்..! மறியலில் ஈடுபட்ட மக்கள்.. கோயம்பேட்டில் பரபரப்பு..
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர், பேருந்து நிலையத்தின் உள்ளே இடங்களில் தூங்குவது வழக்கம். பகல் நேரங்களில் வெவ்வேறு வேலைகளுக்காக சென்றுவிடும் அவர்கள், தினசரி இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் தங்குவர். அந்தவகையில் இன்று ( நேற்று இரவு) தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், பொதுமக்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். பேருந்து நிலையத்தில் தூங்கக்கூடாது என தடியடி நடத்தி அப்புறப்படுத்தியதில், சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயம்பேடு பேருந்து நிலையம் முகப்பு வாசலில் அமர்ந்து போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு உள்ளே பேருந்துகள் செல்ல முடியாமல் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த உயர் அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனாலும் கலைந்து செல்ல மறுத்து பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். காவல்துறையினரின் நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் பாதிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் பேருந்து நிலையத்தின் உள்ளே படுக்க அனுமதிக்கப்பட்டதால் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கோயம்பேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.