போக்சோ நீதிமன்றம் அதிரடி : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகருக்கு மரண தண்டனை..!

 
rape

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், கிறிஸ்தவ மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனைக்காக வரும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மதபோதகர் ஆபிரகாம் (வயது 47) மீது புகார் எழுந்தது.

இதையடுத்து ஆபிரகாம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைதும் செய்யப்பட்டார். ஆப்ரகாமிடம் நடத்திய விசாரணையில், தேவாலயத்திற்கு வந்த நான்கு சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக போக்சோ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து இன்று (ஆகஸ்ட் 20) உத்தரவிட்டார். மேலும், அவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறப்படும் நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ. 10 லட்சம் வீதம், மொத்தம் ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் தீர்ப்பு விவரங்களை கேட்டதும் நீதிமன்ற அறையிலேயே ஆபிரகாம் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் ஆப்ரகாமிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.