பாமகவின் 16ஆவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை - அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்

 
PMK

பாட்டாளி மக்கள் கட்சியின் 16ஆவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.  

சென்னையில் 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 16ஆவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடும் விழா நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் 16ஆவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட, அதனை பெண் பத்திரிகையாளர் பெற்றுக் கொண்டார்.

வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.73,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.53,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும் வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.18,500 கோடி செலவிடப்படும். பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.22,000 கோடி செலவிடப்படும். வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு கடந்த காலத்தில் இழந்த ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டு இருக்கிறது.   கடந்த 60 ஆண்டுகளில் பாசனக் கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின் அளவு 9.03 லட்சம் ஹெக்டேரில் இருந்து 6.22 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. ஏரி, குளங்கள் மூலமான பாசனப் பரப்பு 9.41 லட்சம் ஹெக்டேரில் இருந்து 3.69 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. பாசனப் பரப்பு குறைந்ததன் காரணமாக, 1970-71ஆம் ஆண்டில் 61.69 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு, 2018-19ஆம் ஆண்டில் 45.82 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது.தமிழ்நாடு கடந்த காலங்களில் இழந்த 5.72 லட்சம் ஹெக்டேர் பாசனப் பரப்பில், குறைந்தது 3 லட்சம் ஹெக்டேர், அதாவது 7.5 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் மீட்டெடுக்கப்படும். இதற்காக ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.

anbumani

வேளாண் திட்டங்களுக்கு நிதித் திரட்ட சிறப்பு வரி விதிக்கப்படும்.வேளாண் பாசனத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பெட்ரோலியப் பொருட்களின் மதிப்புக் கூட்டுவரி மீது 10%, முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மீது 20%, மோட்டார் வாகன வரிகள் மீது 30% சிறப்புத் தீர்வை வசூலிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நிதி திரட்டப்படும்.தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,504இல் இருந்து 4,000ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்படும் ஒவ்வொரு நெல்கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5,000 மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும். தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நெல்லில் சுமார் 33% மட்டுமே தற்போது அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை படிப்படியாக 80 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 2021-22ஆம் ஆண்டில் 43 இலட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டில் 72 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,700 விலை வழங்கப்படும்.இதேபோல் பல்வேறு அறிவிப்புகள் பாமகவின் வேளான் நிழல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.