குழப்பத்தில் பாமக தொண்டர்கள்..! மதுராந்தகம் பிரச்சார மேடையில் மாம்பழம் சின்னம்… பாமக யாருக்கு சொந்தம்..?

 
1 1

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் கைகோர்த்து நிற்கவுள்ளனர். இதன்மூலம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அமமுக டிடிவி தினகரன், ஜான்பாண்டியன், ஏ.சி.சண்முகம், ஜெகன் மூர்த்தி, உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளக்கூடிய கூட்டம் என்பதால், கூட்டணி கட்சி தொண்டர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் அதிக அளவு இந்த பொதுக்கூட்டத்தில், கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்ட பேனரில் மாம்பழம் சின்னமும் இடம்பெற்றிருக்கிறது. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கட்சி பிரிந்து நிற்கும் சூழலில் மாம்பழம் சின்னம் யாருக்கும் கிடைக்காது என்றும், இருவரும் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் சண்டையிட்டு கொண்டு சின்னத்தை முடக்கி விடுவர் என்றும் கூறுகின்றனர். ஆனால் அன்புமணி தரப்பில் சற்று கூடுதல் நம்பிக்கை உடன் இருக்கின்றனர். ஏனெனில் டெல்லியின் தயவு தனக்கு கிடைக்கும் என கருதுகின்றனர்.இதை உறுதிப்படுத்தும் வகையில் தான், தற்போது மதுராந்தகம் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் மேடையில் உள்ள பேனரில் மாம்பழம் சின்னம் இடம்பெற்றுள்ளது.