நாளை பொதுத்தேர்வு ; மாணவர்களே பதற்றம் வேண்டாம் - ராமதாஸ் அட்வைஸ்!!

 
pmk

பொதுத்தேர்வு என்பதால் பதற்றம் தேவையில்லை என்று ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார். 

school

தமிழகத்தில் நாளை முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. நாளை தொடங்கும் பொது தேர்வு மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.  3,119 மையங்களில் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுத உள்ளனர். பொதுத்தேர்வை மூன்று லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்களும்,  4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகளும் எழுத உள்ளனர். இதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு,  10ம் தேதி தொடங்கி  31ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. 

tn

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு மற்றும் புதுவையில்  நாளை தொடங்கும்  12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள் தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் சுமார் 18 லட்சம்  மாணவ, மாணவியருக்கும்  எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த இரு பொதுத்தேர்வுகள் தான் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும், முன்னேற்றத்திற்கு உந்து சக்தியாக அமையக்கூடியவையாகும். ஆகவே  வழக்கமான தேர்வுகளை விட இந்தத் தேர்வுகளுக்கு கடுமையாக உழைக்க வேண்டும்; கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்! 10, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது தான் முதல் பொதுத்தேர்வு என்பதால் பதற்றம் தேவையில்லை. கவனச் சிதறல்கள் இல்லாமல் தேர்வுகளை எழுதி, அதிக மதிப்பெண்களை பெற்று வாழ்க்கையில் சாதிக்க  மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகள்! " என்று குறிப்பிட்டுள்ளார்.