“சமூக நீதி விடுதி”... தேவை பெயர் மாற்றமல்ல, தரம் மாற்றம்- ராமதாஸ்

 
ramadoss ramadoss

தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கான விடுதிகள் இனி, “சமூக நீதி விடுதி” என்று பெயர் மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது ஒரு வகையில் வரவேற்கத் தக்கது என்றாலும், பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன் விளையப் போகிறது என்ற கேள்வியும் எழுகிறது? என பாமக தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ramadoss

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கான விடுதிகள் இனி, “சமூக நீதி விடுதி” என்று பெயர் மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது ஒரு வகையில் வரவேற்கத் தக்கது என்றாலும், பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன் விளையப் போகிறது என்ற கேள்வியும் எழுகிறது?

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, சிறுபான்மையினர் நலத் துறை ஆகியவற்றின் கீழ் மொத்தம் 2,739 விடுதிகள் இனி “சமூகநீதி விடுதிகள்” என அழைக்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர், “சமூக ஏற்றத்தாழ்வுகளை உடைத்து, சமநீதியை வளர்ப்பதற்காக பள்ளி கல்லூரிகளின் அரசு விடுதிகளின் பெயர் சமூக நீதி விடுதிகள் என மாற்றப்படும்” என்று அறிவித்திருக்கிறார். பெயர்களை மட்டும் மாற்றுவதால் பெரிய மாற்றம் ஏதும் நடந்துவிடாது. நீதியரசர் சந்துரு அளித்த அறிக்கையில் பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது என்ற பரிந்துரையை ஏற்று இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.

இதை விட முக்கியமானது, தற்போது பள்ளி, கல்லூரி வளாகங்களில் மிக ஆபத்தான சம்பவங்கள் அவ்வப்போது செய்திகளாக வெளியாகி வருகின்றன. மாணவர்களிடையே மதுப்பழக்கம், போதைப் பழக்கம் அதிகரித்து வருகின்றன. அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் சமூக நீதியின் ஓர் அடையாளம் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தில் மாணவ மாணவர்கள் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறும் நோக்கில் படிப்பில் கவனம் செலுத்த போதிய அவகாசம் கிடைப்பதற்காக தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. அங்கே மாணவர்கள் கல்வி கற்பதற்கு உரிய வழிவகைகளை அமைத்து அவர்களை முன்னேற்றலாம். இதுபோன்றவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்துவதே நல்லது. பெயர் மாற்றத்தோடு நின்றுவிட்டால் பலனில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.